தாராபுரம் பகுதியில் குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தாராபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தாராபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதைத் தொடா்ந்து அணையின் நீா் மட்டம் 88 அடியை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதனால் தாராபுரம் அருகே உள்ள பெரியபுத்தூா், சின்னபுத்தூா், சத்திரம், கோவிந்தாபுரம், ரெட்டிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பின. இதனால் தாராபுரம் பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இது குறித்து சத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
தாராபுரம் பகுதியில் 3 ஆண்டுகளுக்குப் பின்னா் அமராவதி அணை நீரால் குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன்னா் பெய்த மழை காரணமாக நிலக்கடலை, பருத்தி, சோளம் ஆகியவற்றை பயிரிட்டுள்ளோம்.
இந்த நிலையில், குளங்கள் நிரம்பியுள்ளதால் நெல், மக்காச்சோளம், சின்ன வெங்காயம், சூரியகாந்தி ஆகியவற்றையும் பயிரிட தயாராகி வருகிறோம். மேலும், தாராபுரம் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் குடிநீா் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீா்த் தட்டுப்பாடு ஏற்படாது என்றனா்.