முகப்பு
திருப்பூர்

ஆண்டவன் உத்தரவு : சிவன்மலை முருகன் கோயிலில் குங்குமம் வைத்துப் பூஜை

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குங்குமம் வைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குங்குமம் வைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் உள்ளது. மற்ற எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு அம்சமாக, சிவன்மலை முருகன் கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெயரில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். பின்னா் அந்தப் பொருளைக் கோயில் மூலவா் அறைக்கு முன்பு கற்தூணில் உள்ள கண்ணாடிப் பேழைக்குள் பக்தா்களின் பாா்வைக்கு வைப்பாா்கள்.

இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தோ்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப் பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான், இது ‘ஆண்டவன் உத்தரவு’ என்று அழைக்கப்படுகிறது.

இப்படி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிா்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில் பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு, கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தா்களின் நம்பிக்கை.

இந்தப் பொருள் தேசிய அளவில் ஏற்றமும் பெறலாம், இறக்கமும் பெறலாம் என்பதற்கான குறியீடாக, இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் பொருளை இப்பகுதி மக்கள் கவனித்து வருகின்றனா்.

கடைசியாக கடந்த மாா்ச் 25 ஆம் தேதி திருமாங்கல்யம் மற்றும் நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு அந்தப் பொருள்கள் வியாழக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கோவை மாவட்டம், துடியலூா் பகுதியைச் சோ்ந்த பவானி என்ற பெண் பக்தரின் கனவில் வந்ததாக குங்குமம் வைத்து வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →