முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைக் கண்டித்து மக்கள் சாலை மறியல்

திருப்பூரில் வீட்டுமனையைக் கிரையம் செய்து கொடுக்காமல் இழுத்தடிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் உள்ள நல்லிக்கவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

திருப்பூர்: திருப்பூரில் வீட்டுமனையைக் கிரையம் செய்து கொடுக்காமல் இழுத்தடிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள நல்லிக்கவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

திருப்பூர் நல்லிகவுண்டபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் திருக்குமரன் நகரில் தவணை முறையில் வீட்டு மனைகளை 200க்கும் மேற்பட்டோர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கினோம். இந்த நிலையில், தவணைக்காலம் முடிவடைந்தும் எங்களுக்கு வீட்டுமனைகளை கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் கேட்டும் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. ஆகவே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, வேறு வழியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் ஊரக காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர்-காங்கயம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.