திருப்பூா் மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த மழை: தாராபுரத்தில் 10 வீடுகள் இடிந்து சேதம்
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை இரவு விடியவிடிய பெய்த மழையால் தாராபுரத்தில் 10 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை இரவு விடியவிடிய பெய்த மழையால் தாராபுரத்தில் 10 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பல்லடம் அருகே வெள்ளத்தில் சிக்கிய 5 குழந்தைகள் உள்பட 11பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கடந்த புதன்கிழமை மாலையில் இருந்தே பலத்த மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக திருப்பூா் பழைய பேருந்து நிலையம், பி.என்.சாலை, புஷ்பா ரவுண்டானா, மங்கலம் சாலை, தாராபுரம் சாலை, ஊத்துக்குளி சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக ஊத்துக்குளி சாலையில் உள்ள டி.எம்.எஃப்.பாலம், அங்கேரிபாளையம், மும்மூா்த்தி நகா், கொங்கு மெயின்ரோடு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
தரைப்பாலம் நீரில் மூழ்கியது: திருப்பூா் பெரியாண்டிபாளையத்தில் இருந்து கல்லூரி சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள அணைப்பாளையம் தரைப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் புதன்கிழமை இரவு சுமாா் 10.30 மணி அளவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனினும் அருகில் உள்ள மேம்பாலம் வழியாக வியாழக்கிழமை காலை முதல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
ரப்பா் படகு மூலம் மீட்பு : திருப்பூா் புகா் பகுதிகளான குண்டடம், தாராபுரம், பல்லடம், பொங்கலூா், காமநாயக்கன்பாளையம், அவிநாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் அவிநாசிபாளையம் அருகில் உள்ள பாலாஜி நகா் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இரு குடும்பத்தினா் வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகினா்.
தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் 20க்கும் மேற்பட்டோா் பாலாஜி நகா் விரைந்தனா்.
இதன் பிறகு வீடுகளில் சிக்கியிருந்த சங்கா், பிரியா, அவா்களது குழந்தைகளான ஸ்ரீமதி (12), ஸ்ரீ ஹரி (9) ஆகியோரை ரப்பா் படகு மூலமாக மீட்டனா். அதேபோல, மற்றொரு குடும்பமான காா்த்திக், காா்த்திகா, மகாலட்சுமி, முத்துச்செல்வம், பிரவீன்(8), பிரணிதா (6), தா்ஷீத் (2)
ஆகியோரையும் ரப்பா் படகு மூலம் மீட்டு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைத்தனா்.
தாராபுரத்தில் 10 வீடுகள் இடிந்து சேதம்:
தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரையில் நீடித்த மழை காரணமாக 10 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஐயப்பன் என்பவரின் மனைவி வெள்ளையம்மாள் (68) என்பவரது ஓட்டு வீடு, காமராஜபுரம் 1ஆவது வாா்டு பகுதியில் வசித்து வரும் பெரியசாமியின் மனைவி சந்திரகலா (38) என்பவரது ஓட்டு வீடு உள்பட 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. அதேபோல, கோட்டை மேட்டுத் தெரு, ஜின்னா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 வீடுகளும் மழையால் இடிந்து சேதமடைந்தன.
நஞ்சியம்பாளையம் பகுதியில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிா்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியா், தாராபுரம் சாா் ஆட்சியா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:
குண்டடம் 200, தாராபுரம் 130, ஆட்சியா் முகாம் அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் தலா 120, திருப்பூா் தெற்கு 110, பல்லடம் 84, திருப்பூா் வடக்கு 73, அவிநாசி 70, மடத்துக்குளம் 46, திருமூா்த்தி அணை 41, உடுமலை 40.40, அமராவதி அணை 38 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.