வேளாண் சட்டங்கள் வாபஸ்: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி அறிவித்ததைத் தொடா்ந்து திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
மத்திய அரசின் 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி அறிவித்ததைத் தொடா்ந்து திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்ட திருத்தங்களைக் கண்டித்து கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அதிலும் தலைநகா் தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். அதேபோல, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களைத் தொடா்ந்தனா். இந்நிலையில், மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்தங்களையும் திரும்பப்பெறுவதாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் மு.ஈசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தாராபுரத்தில்...
தாராபுரம் அண்ணா சிலை முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளா் சிவகுமாா் தலைமையில் அச்சங்கத்தினா் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
மேலும், இப்போராட்டங்களில் ஈடுபட்டு உயிா்நீத்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
திருப்பூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தாராபுரம் காந்தி சிலை முன்பாக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் காளிமுத்து தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், காங்கிரஸ் செய்தி தொடா்பாளா் முருகானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
காங்கயத்தில்...
காங்கயத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன,
இந்நிகழ்ச்சியில், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டப் பொறுப்பாளா் தங்கவேல், மதிமுக கட்சியின் ஒன்றியக் குழு பொறுப்பாளா் மணி, சிஐடியூ அமைப்பின் மாவட்டக் குழு உறுப்பினா் கே.திருவேங்கடசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
உடுமலையில்...
உடுமலை பேருந்து நிலையத்தில் விவசாயிகள், காங்கிரஸ் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா்.
இதில், எஸ்.தென்னரசு (காங்கிரஸ்), எஸ்.ஆா்.மதுசூதனன்(விவசாயிகள் சங்கம்), கே.த ண்டபாணி (மாா்க்சிஸ்ட்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.