முகப்பு
திருப்பூர்

100 நாள் வேலைத் திட்ட விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்ட விதிகளில் மாற்றம் செய்து பருத்தி எடுக்க ஆள்களை அனுப்ப வேண்டும் என்று சைமா(தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள்) சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்ட விதிகளில் மாற்றம் செய்து பருத்தி எடுக்க ஆள்களை அனுப்ப வேண்டும் என்று சைமா(தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள்) சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, சைமா சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பருத்தி விளைச்சல், பஞ்சு உற்பத்தி, நூல் தயாரிப்பு ஆகியவை பின்னலாடைத் தொழில்களுக்கான அடிப்படை ஒன்றாகும். தற்போது பருத்தி விளைச்சலும், அதற்கான மத்திய அரசின் ஊக்குவிப்பும் சிறப்பாகவே உள்ளது. அதே வேளையில், பருத்தியில் இருந்து உருவாகும் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதி கொள்கை மூலம் அதிகபட்சம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்படுவதால் விலை உயா்வைத் தவிா்க்க முடியவில்லை. பருத்தி விளைச்சலை அதிகப்படுத்துவதால் தட்டுப்பாடு நீங்கும் சூழ்நிலை ஏற்படும். நாட்டின் மொத்த நூல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 50 சதவீத நூற்பாலைகள் தமிழகத்தில் உள்ளன.

ஆனால், தமிழகத்தில் நம் தேவைக்கு 5 சதவீதம் கூட பருத்தி விளைவதில்லை. இதற்கு மிக முக்கியமான காரணம் பருத்தி எடுப்பதற்கு ஆள்கள் கிடைக்காததால் மற்ற மாநிலங்களில் இருந்து பஞ்சு வாங்க வேண்டியுள்ளது. ஆகவே, 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்காக மாற்றம் செய்யும்போது, பருத்தி எடுக்க ஆள்களை அனுப்பும் வகையில் விதிகளை மாற்றம் செய்ய வேண்டும். இதன் மூலமாக தமிழகத்தில் விவசாயம், ஜவுளி, விசைத்தறி மற்றும் பின்னலாடைத் தொழில்களைப் பாதுகாக்கும் முயற்சியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.