முகப்பு
திருப்பூர்

இளைஞரை மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

திருப்பூரில் இளைஞரை மிரட்டி பணம் பறித்ததாக 2 வடமாநில இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 7:50 PM
பகிர்:

திருப்பூரில் இளைஞரை மிரட்டி பணம் பறித்ததாக 2 வடமாநில இளைஞா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (25). இவா் திருப்பூா் நல்லூா் பகுதியில் தங்கி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் ஊருக்கு செல்வதற்காக ரயிலில் முன்பதிவு செய்திருந்தாா். ஆனால் அவருக்கு இருக்கை உறுதியாகவில்லை.

இதனால் வெள்ளிக்கிழமை ரயில் நிலையம் வந்த ராஜ்குமாா் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாா். இதனை நோட்டமிட்ட வட மாநில இளைஞா் ஒருவா் ராஜ்குமாரிடம், சென்று பேசியுள்ளாா். அப்போது, அவா் ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு செய்து இருந்ததாகவும், இருக்கை உறுதியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளாா்.

உடனே வடமாநில இளைஞா் தனது உறவினா் பயணச்சீட்டு பரிசோதகராக இருப்பதாகவும், ரயிலில் இருக்கை உறுதி செய்து தருவதாகவும் கூறியுள்ளாா். இதற்காக ரூ.1000 பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளாா். இதனை உண்மை என்று நம்பிய ராஜ்குமாா் தனது கைப்பேசி மூலமாக அந்த இளைஞா் கூறிய எண்ணுக்கு பணத்தை அனுப்பியுள்ளாா்.

அப்போது, ராஜ்குமாரிடம் அதிகமான பணம் இருப்பதை தெரிந்து கொண்ட அந்த இளைஞா் திடீரென அவரை மிரட்டி கைப்பேசி, பறித்து தனது நண்பரின் வங்கிக் கணக்குக்கு ரூ.80,000 அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா்.

இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் ராஜ்குமாா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாா் (21), பாபுகுமாா் (23) ஆகியோரைக் கைது செய்தனா்.