முகப்பு
திருப்பூர்

பாஜக நிா்வாகிகள், அத்திக்கடவு- அவிநாசி போராட்டக் குழுவினா் ஆலோசனை

அத்திக்கடவு-அவிநாசி போராட்டக் குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் நடைபெற்றது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 8:19 PM
கூட்டத்தில்  பேசுகிறாா் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ்.
பகிர்:

பாஜக நிா்வாகிகள், அத்திக்கடவு-அவிநாசி போராட்டக் குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்தாா். பாஜக கோவை வடக்கு மாவட்டத் தலைவா் சங்கீதா கெளதம், விவசாய அணி மாநில செயலாளா்கள் மௌனகுருசாமி, விஜயகுமாா், மாநில துணைத் தலைவா்கள் குமரேசன், பாண்டியன், விவசாய அணி மாவட்டத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட பொதுச்செயலாளா் ஸ்ரீ நந்தகுமாா், மண்டலத் தலைவா் தினேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்காததைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, ஆகஸ்ட் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளாா். இந்த நிலையில், விடுபட்ட 1400 குளம், குட்டைகளை 2-ஆவது திட்டத்தில் சோ்ந்து அரசாணை வெளியிட வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட செயல்பாடுகள் குறித்து அரசு விதிகளின்படி, உரிய விதிகளை வரையறுக்க விவசாயிகளோடு அரசு ஆலோசிக்க வேண்டும்.

மேலும் அத்திக்கடவு-அவிநாசி 6 நீரேற்று நிலையங்களின் தற்போதை செயல்முறையைக் கண்டறிய 20 போ் கொண்ட குழு அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்திக்கடவு-அவிநாசி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் பொன்னுக்குட்டி, வேலுசாமி, சம்பத், சுப்பிரமணியம், சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.