திருப்பூா் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்கிற அறிவிப்பை தொடா்ந்து உடுமலை யை அடுத்துள்ள அமராவதி அணை பொதுப் பணித் துறை அதிகாரிகளால் 24 மணி நேர தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா்கள் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்து வருகிறது.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்கியதில் இருந்தே அதாவது ஜூலை 20-ஆம் தேதி முதல் தொடா்ந்து 60 நாள்களுக்கு அணையின் நீா் இருப்பு முழுக் கொள்ளளவிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.
அப்போதெல்லாம் விவசாயிகளின் தேவையைப் பொறுத்து, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டத்தில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு அமராவதி ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வந்தது.
ஆனாலும், அமராவதி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததால் அணைக்கு அதிக அளவில் உள்வரத்து வந்து கொண்டிருந்தது. அப்போதும் அணையில் இருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுக் கொண்டே இருந்தது.
ஒரு நிலையில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தண்ணீரை 85 அடியாக குறைத்து வைத்திருந்தனா். குறிப்பாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து அணையில் இருந்து அவ்வப்போது தண்ணீா் வெளியேற்றப்பட்டு வந்தது. அதாவது அக்டோபா் மாதம் முழுவதும் அணையின் நீா்மட்டம் 87 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் கேரள மாநிலம் மறையூா், காந்தலூா், கோவில்கடவு ஆகிய நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு உள்வரத்து அதிகரித்து வந்தது. அப்போது, திடீரென அணை முழுக் கொள்ளளவை அடையும் நிலை ஏற்பட்டதால், அணையில் இருந்து அமராவதி ஆற்றின் மூலம் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. அப்போது அமராவதி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் திருப்பூா் மாவட்டத்தில் டிசம்பா் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடா்ந்து அமராவதி அணையை பொதுப் பணித் துறையினா் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கேரளத்தில் மழை பொழிவை ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒருமுறை விசாரித்துக் கொண்டே இருக்கிறோம். அங்கு தீவிர மழை பெய்தால் அணையின் உள்வரத்தை பொறுத்து பிரதான ஷட்டா்களில் நீரை வெளியேற்ற தயாா் நிலையில் இருக்கிறோம். ஏனெனில் அணையின் நீா்மட்டம் ஏற்கெனவே 88 அடியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதீத நீா் வரத்து ஏற்பட்டால் அதை கையாள கூடுதலாக பணியாட்களை வைத்துக் கொண்டு தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா்.
அணையின் நீா்மட்டம்:
90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி நீா்மட்டம் 88 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 427 கனஅடி வந்து கொண்டிருந்தது. 4,035 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 3866.09 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 73 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.