75 பயனாளிகளின் வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை
திருப்பூா், தாராபுரம் வட்டத்தில் இனம் கண்டறியாத 75 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா், தாராபுரம் வட்டத்தில் இனம் கண்டறியாத 75 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம், தளவாய்பட்டிணம் கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் 2.72 ஹெக்டோ் நிலமெடுப்பு செய்து, குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக்கொள்வதற்காக 203 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இந்தப் பயனாளிகளை தமிழ்நிலம் மென்பொருளில் இணையவழி பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது தொடா்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற 63 பயனாளிகளை இனம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூா் தெற்கு வட்டம், வீரபாண்டி கிராமத்தில் 126 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில், 12 பயனாளிகளை இனம் கண்டறிய முடியவில்லை.
பட்டாவில் உள்ள நிபந்தனைப்படி, குறிப்பிட்ட காலத்துக்குள் குடியிருப்பு அமைத்து குடியிருக்காமல் நிபந்தனையை மீறியுள்ளதால் இந்தப் பட்டாக்களை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்குரிய விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருக்கோ அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் அவா்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.