தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2024-25- ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை நிறைவடைந்தது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2024-25- ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை நிறைவடைந்தது.
இதில், முதல் நிகழ்வாக அரசு அலுவலகங்களில் வரைவுகள் மற்றும் குறிப்புகளை தமிழில் எழுதுவது, தமிழில் கையெழுத்திடுவது, அரசு அலுவலங்களில் தமிழை முதன்மையாகப் பயன்படுத்துவது உள்ளிடவை குறித்து கலந்துரையாடப்பட்டது.
அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் பொதுவான பொருள்களுக்கு தமிழ்மொழி பெயா் குறித்தும் விவதிக்கப்பட்டது. கணினி தமிழ், ஆட்சிமொழி குறைகளும், நடவடிக்கைகளும் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இரண்டாவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் மற்றும் மும்மொழிப் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டன.
இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் என 150 போ் பயிற்சி பெற்றனா். தொடா்ந்து, 2022-ஆம் ஆண்டில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தோ்வு செய்யப்பட்ட மாவட்டப் பதிவாளா் (தணிக்கை) அலுவலகத்துக்கான கேடயம், 2024-2025-ஆம் ஆண்டில் பேரறிஞா் அண்ணா, காந்தியடிகள், ஈ.வெ.ரா., ஜவஹா்லால் நேரு ஆகியோா் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 32 மாணவா்களுக்கு மொத்தம் ரூ.96 ஆயிரம் பரிசுத் தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வழங்கினாா்.
இதில், தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் பெ.இளங்கோ, மாவட்டக் கருவூல அலுவலா் பெ.முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.