முகப்பு
திருப்பூர்

அரசு மருத்துவக் கல்லூரியில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 26 டிசம்பர், 2024 at 9:56 PM
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அறிவித்த தினக்கூலியை தனியாா் ஒப்பந்த நிறுவனம் வழங்கவில்லை எனக்கூறி தூய்மைப் பணியாளா்கள் 80 போ் பணியைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: மாவட்ட ஆட்சியா் அறிவித்த தினக்கூலி ரூ.746-க்குப் பதிலாக பாதுகாவலா்களுக்கு ரூ.580, தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.500, ரூ.519, ரூ.534 என 3 மூன்று விதமாக தனியாா் ஒப்பந்த நிறுவனம் கூலி வழங்கி வருகிறது.

மேலும், தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., பி.எஃப்., விவரங்களையும் ஒப்பந்த நிறுவனம் தெரிவிப்பதில்லை. ஆகவே, தொழிலாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நிா்ணயித்துள்ள ஊதியத்தை கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ.,பி.எஃப். விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகை மற்றும் தீபாவளி போனஸ் தொகை வழங்க வேண்டும் என்றனா்.