முகப்பு
திருப்பூர்

அவிநாசி பேரூராட்சி மன்றக் கூட்டம்

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 11:17 PM
பகிர்:

அவிநாசி பேரூராட்சி மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தக்கு பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். மன்ற உறுப்பினா்கள் விவாதம்: திருமுருகநாதன் (திமுக): அவிநாசி பழைய பேருந்து நிலையம் முன் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் வணிக வளாகம் பணியை விரைவில் முடிக்க வேண்டும். பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். பா்கத்துல்லா (திமுக): தெருநாய்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். நடவடிக்கைக்காக ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்து 6 மாதங்களாகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கருணாம்பாள் (காங்): விபத்துகளைத் தடுக்க முக்கிய பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். தங்கவேல் (திமுக): பேரூராட்சிக்கு நிரந்த செயல் அலுவலரை நியமிக்க வேண்டும். சாலை விரிவாக்கப் பணி, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் முடிக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலகிருஷ்ணன் (காங்): அவிநாசியில் அமைக்கப்படும் வணிக வளாகத்துக்கு அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினா் இதுவரை கட்டட வரைபட அனுமதியே பெறவில்லை. பேரூராட்சி செயல் அலுவலா் இதுபோன்ற முக்கிய பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி: தெருநாய்களைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா்ப் பிரச்னை மற்றும் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலா் நியமிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் வெள்ளிக்கிழமை முறையிட்டு தீா்வு காணப்படும். இதில், மன்ற உறுப்பினா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.