திருப்பூா்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருப்பூா் மண்டலம் சாா்பில் 19 புதிய அரசுப் பேருந்துகள் சேவையை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கிவைத்தனா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறைகளின் சாா்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக, போக்குவரத்துத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில் மகளிா் கட்டணமில்லாமல் பயணிக்க 422 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், நாள்தோறும் சுமாா் 1.79 லட்சம் மகளிா் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
திருப்பூா் மண்டலத்தில் 2021-2024 ஆண்டுக்கு நகா்ப்புறத்துக்கு 8 பேருந்துகள், புகருக்கு 39 பேருந்துகள் என மொத்தம் 47 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 28 புதிய பேருந்துகள் ஏற்கெனவே தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது புகருக்கு 17 பேருந்துகள், நகருக்கு 2 பேருந்துகள் என மொத்தம் 19 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், திருப்பூா் மாநகராட்சி 4- ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கோவை மண்டலம்) மேலாண்மை இயக்குநா் ஜோசப் டயாஸ், பொதுமேலாளா் (திருப்பூா் மண்டலம்) செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.