முகப்பு
திருப்பூர்

மகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

Updated On : 12 ஜூன், 2024 at 9:51 PM
பகிர்:

திருப்பூா், ஜூன் 12: ஊத்துக்குளி அருகே 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் 30 வயது பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறாா். இப்பெண், 40 வயது கூலித் தொழிலாளியை 2-ஆவதாக திருமணம் செய்துகொண்டுள்ளாா்.

இந்நிலையில், மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 2023- ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகளுக்கு தொழிலாளி பாலியல் தொல்லையளித்துள்ளாா். இதனால், சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற சிறுமி நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, காங்கயம் மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி, தாய் புகாா் அளித் தனா்.

இதையடுத்து, தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஸ்ரீதா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.