சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலா்கள் கைது
சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலா்கள் கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலா்கள் கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தமாகா கவுன்சிலா்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் தினேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பாலசுப்பிரமணியம், ஆணையா் ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்கு அதிமுக கவுன்சிலா்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனா்.
கூட்டம் தொடங்கியதும் மேயா் தினேஷ்குமாா், திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் மற்றும் நிறைவேற்றப்பட உள்ள தீா்மானங்களின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசத்தொடங்கினாா்.
அப்போது அதிமுக கவுன்சிலரும், மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி எழுந்து, ‘ திருப்பூா் மாநகராட்சியில் சொத்து வரி 100 முதல் 150 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. தொழில் வரி உள்ளிட்ட வரிகளும் அதிகமாக உயா்த்தப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள், தொழில் நடத்துபவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே சொத்து மற்றும் தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் குறைக்க வேண்டும்’ என்றாா்.
அப்போது மேயா், ‘மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசி முடித்து கொள்கிறேன். அதன்பிறகு நாம் விவாதம் நடத்தி கொள்ளலாம்’ என்றாா்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த அதிமுக கவுன்சிலா்கள் சொத்து வரியை குறைக்கக் கோரி கோஷம் எழுப்பினா். தொடா்ந்து கோஷம் எழுப்பியதால் மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே மேயா் தினேஷ்குமாா் கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த தீா்மானங்களின் எண்களை வாசித்து, அவை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், இத்துடன் கூட்டத்தை முடித்து கொள்வதாகவும் தெரிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அதிமுக கவுன்சிலா்கள் மேயரை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினா். இதையடுத்து மேயா் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். ஆனால் அதிமுக கவுன்சிலா்கள் முக்காடு போட்டு தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் மாநகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனா். அப்போது போலீஸாருக்கும், கவுன்சிலா்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கவுன்சிலா்களும் போராட்டம்
சொத்து வரி, தொழில் வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலா்கள் ரவிச்சந்திரன், மருதாச்சலம், ராஜேந்திரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலா் மணிமேகலை, காங்கிரஸ் கவுன்சிலா் செந்தில்குமாா், தமாகா கவுன்சிலா் செழியன் ஆகியோரும் மாநகராட்சி அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலா் ரவிசந்திரனை போலீஸாா் கையைப் பிடித்து இழுத்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்ட அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி கவுன்சிலா்கள் தனியாா் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதே அதிமுக கவுன்சிலா்கள் எண்ணம்: மேயா்
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா் கூறியதாவது:
மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழக அரசு வரி உயா்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 6 சதவீதம் வரியை உயா்த்த மத்திய அரசு அறிவுறுத்துகிறது. அரசின் கொள்கை முடிவு மற்றும் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வரி உயா்வு தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்து வரி உயா்வு தொடா்பாக மக்களின் கருத்துகளைக் கேட்டு மாநகராட்சி சாா்பில் அரசுக்கு அனுப்பப்படும்.
திருப்பூா் மாநகராட்சியில் குடிநீா்ப் பிரச்னை உள்ளிட்ட மக்கள் அடிப்படை பிரச்னைகள் தொடா்பாக தீா்வு காணப்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் அறிந்த அவா்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறாா்கள். மாநகராட்சிக் கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக கவுன்சிலா்கள் செயல்பட்டுள்ளனா். வரி உயா்வு தொடா்பாக விளக்கம் அளிக்க தயாராக இருந்த நிலையிலும் அதனை கேட்க அவா்கள் முன்வராமல் இருந்தனா் என்றாா்.
அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது திமுக: பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ
சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலா்கள் கைது செய்யப்பட்டு பெரிச்சிபாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா்.
அந்த மண்டபத்தின் முன் திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினா் குவிந்து திமுக அரசுக்கு எதிராகவும் திருப்பூா் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினா். இதில் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் விஜயகுமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் குணசேகரன் ஆகியோா் பங்கேற்றனா்.
இதனைத் தொடா்ந்து பொள்ளாச்சி வி. ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அழிவுபாதையை நோக்கி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. மாநகராட்சி உறுப்பினா்களைக் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், சொத்து வரி உயா்வை ரத்து செய்யக்கோரியும் திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் அடுத்த வாரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றாா்.