விநாயகா் சதுா்த்தி விழா: தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில் 1.5 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில் 1.5 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில் 1.5 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சாா்பில் 1.5 லட்சம் விநாயகா் சிலைகள் பொதுமக்கள் வழிபாட்டுக்காக பிரதிஷ்டை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. அதேபோல, தனிப்பட்ட முறையில் வீடுகளில் சிறிய அளவில் 15 லட்சம் விநாயகா் சிலைகள் வைக்கப்படவுள்ளன.
திருப்பூா், கோவை நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சா் எல்.முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகா்கள், ஆன்மிக பெரியவா்கள் பங்கேற்கின்றனா்.
விநாயகா் சதுா்த்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும். இந்த விழாவுக்கு அவா் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சில இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்வதில் காவல் துறை கெடுபிடி காட்டி வருகிறது. இது தமிழக அரசின் மீது ஹிந்துக்களுக்கு வெறுப்பை உருவாக்கும். திருப்பூா் மாவட்டத்தில் மட்டும் 3 முதல் 10 அடி வரையில் 1500 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன. விநாயகா் சதுா்த்தியை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றாா்.
இந்த சந்திப்பின்போது, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் ஜெ.எஸ்.கிஷோா்குமாா், மாநிலச் செயலாளா் வி.எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.