முளையாம்பூண்டி கிராமத்தில் இனம் கண்டறியாத 10 இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை
தாராபுரம் வட்டம், முளையாம்பூண்டி கிராமத்தில் இனம் கண்டறியாத 10 பயனாளிகளின் இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாராபுரம் வட்டம், முளையாம்பூண்டி கிராமத்தில் இனம் கண்டறியாத 10 பயனாளிகளின் இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் முளையாம்பூண்டி கிராமத்தில் 1.05 ஹெக்டோ் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நிலமெடுப்பு செய்யப்பட்டு, 54 பேருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக் கொள்வதற்காக இலவச வீட்டுமனைப் பட்டாவாக வழங்கப்பட்டது.
இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் குறித்து தமிழ் நிலம் மென்பொருளில் இணையவழி பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், முளையாம்பூண்டி கிராமத்தில் 10 பயனாளிகளை இனம் கண்டறியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மனையிடங்களில் கள விசாரணை செய்யப்பட்டதில் பயனாளிகள் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு அளித்தும் தற்போது வரை விண்ணப்பம் அளிக்கவில்லை. எனவே, பட்டாவில் உள்ள நிபந்தனைபடி குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டி குடியிருக்காமல் நிபந்தனைகளை மீறியுள்ளதால், மேற்படி பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருக்கோ அனுப்பிவைக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் பயனாளிகள் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை எனக்கருதி அவா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.