சுதந்திர தினம் உள்ளிட்ட 3 நாள்கள் தொடா் விடுமுறையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு கூடுதலாக 73 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமையும், கிருஷ்ண ஜெயந்தி சனிக்கிழமையும் கொண்டாடப்படுகின்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருப்பூரில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வியாழக்கிழமை மாலையிலிருந்தே பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கினா்.
குறிப்பாக, திருப்பூரில் வசிக்கும் தென்மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையங்களில் அதிக அளவில் கூடியதால் அனைத்து பேருந்து நிலையங்களிலுமே பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லும் மக்களுக்கு வசதியாக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் திருப்பூரில் இருந்து பல்வேறு வெளிமாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை இரவு முதல் கோவில்வழி பேருந்து நிலையமான திருப்பூா் குமரன் பேருந்து நிலையத்தில் இருந்து 30 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதேபோல, கோவை, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு கருணாநிதி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 20 பேருந்துகளும், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் பகுதிகளுக்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 20 பேருந்துகளும், சென்னைக்கு 3 பேருந்துகளும் இயக்கப்பட்டன.