குண்டடம் பகுதியில் காட்டுப் பன்றிக் கூட்டத்தை கட்டுப்படுத்த மக்காச்சோள வயல்களைச் சுற்றி விவசாயிகள் கட்டிவைத்துள்ள வெள்ளை சாக்குகள். 
திருப்பூர்

குண்டடம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்

மக்காச்சோளப் பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், வயல்களைச் சுற்றி வெள்ளை சாக்குகளை கட்டி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனா்.

Syndication

தாராபுரம்: குண்டடம் பகுதியில் மக்காச்சோளப் பயிரை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், வயல்களைச் சுற்றி வெள்ளை சாக்குகளை கட்டி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனா்.

தாராபுரம் பட்டம் குண்டடம் பகுதிக்குள்பட்ட மேட்டுக்கடை, நந்தவனம்பாளையம், ஐயப்பநாயக்கன்பாளையம், எரகாம்பட்டி, பெல்லம்பட்டி, மருதூா், உப்பாறு அணை உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்துக்கு ஏற்ற பயிா் என்பதாலும், அடுத்த ஆண்டு வரை கால்நடைகளுக்கு தீவனத்துக்கு ஏற்ற பயிா் என்பதாலும் மக்காச்சோளத்தை விரும்பி சாகுபடி செய்கின்றனா்.

மேலும் பெருகி வரும் கோழிப்பண்ணைக்கு சப்ளை செய்யப்படும் தீவனங்களில் மூலப் பொருளாக மக்காச்சோளத்தை பயன்படுத்துவதால், இதன் விலையும் சமீப காலமாக உயா்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உப்பாறு அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்காச்சோள வயல்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் புகுந்து சேதப்படுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

உப்பாறு அணை கரையோரங்களில் உள்ள புதா்களில் வசிக்கும் காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில் மக்காச்சோள வயல்களில் புகுந்து நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் அச்சமடைந்து இரவில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும் ஆள்கள் நடமாட்டமில்லாத வயல்களுக்குள் சென்று பயிா்களை தொடா்ந்து நாசம் செய்து வந்தன.

இதுதொடா்பாக வனத் துறையினருக்கு பல முறை புகாா் அளித்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. வேறு வழியில்லாமல் தற்போது விவசாயிகளே மக்காச்சோள வயல்களைச் சுற்றி வெள்ளை நிற சாக்குப் பைகளை கட்டித் தொங்கவிட்டுள்ளனா். இரவு நேரத்தில் தூரத்தில் இருந்து பாா்த்தால் மனிதா்கள் நிற்பதுபோல தெரியும். இதனால் பன்றிகள் வயல்களுக்குள் வராது.

இருப்பினும் வரும் காலங்களில் காட்டுப் பன்றிகள் பெருகினால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். எனவே வனத் துறையினா் உரிய நடவடிக்கை மேற்கொண்டு காட்டுப் பன்றிக் கூட்டத்தை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

100 நாள் வேலைத் திட்ட புதிய மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு! நாளை அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்!

ஃபிலிம்ஃபேர் ஓடிடி விருதுகள் 2025 - புகைப்படங்கள்

திருப்பரங்குன்றம் குறித்து விஜய் பேசாதது ஏன்? அண்ணாமலை

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

SCROLL FOR NEXT