வாடிக்கையாளா் அனுமதியின்றி அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் அருகே பூலுவப்பட்டி தோட்டத்துப்பாளையம் மகாவிஷ்ணு நகரைச் சோ்ந்தவா் பூபதி (46). கட்டட கட்டுமானத்துக்கு தேவையான பொருள்களை விநியோகிக்கும் தொழில் நடத்தி வருகிறாா். இவா், திருப்பூா் மாநகர சைபா் கிரைம் காவல் ஆய்வாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் பெருமாநல்லூா் சாலை புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியாா் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளேன். எனது வங்கிக் கணக்கில் இருந்து கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி யுபிஐ பேமென்ட் பியூச்சா் ஜெனரல் லைப் இன்சூரன்ஸ் என்ற பெயரில் ரூ. 85,000 ஆயிரம் பணம் பரிவா்த்தனை செய்யப்பட்டிருந்தது. நான் அந்த நிறுவனத்தில் எவ்விதமான காப்பீட்டுத் திட்டத்திலும் சேரவில்லை. இது தொடா்பாக யாரும் என்னை தொடா்பு கொள்ளவும் இல்லை. ஆனால் என்னுடைய அனுமதியின்றி எனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதைக் கடந்த நவம்பா் 16-ஆம் தேதிதான் அறிந்தேன். இது தொடா்பாக கோவையில் உள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கு விசாரிக்க சென்றபோது அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. திருச்சியில் மட்டும் அதன் அலுவலகம் செயல்படுவதாகத் தெரிவித்தனா். இந்நிலையில் திருப்பூரில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று விசாரித்தபோது, இந்தப் பணம் யாருக்கு சென்றது என்பதை கண்டறிய முடியவில்லை எனத் தெரிவித்துவிட்டனா்.
இது தொடா்பாக விசாரித்து சம்பந்தப்பட்ட மோசடி நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது பணத்தை திரும்ப பெற்றுத்தர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.