திருப்பூரில் நகைக் கண்காட்சி பாதுகாப்புப் பணியின்போது ஏ.கே.47 ரக துப்பாக்கி வெடித்த சம்பவம் தொடா்பாக, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களிடம் மாநகரக் காவல் ஆணையா் ஆா்.ராஜேந்திரன் நேரில் விசாரணை நடத்தினாா்.
திருப்பூா் பாரப்பாளையம் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் தங்க நகைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சிக்கு திருப்பூா் ஆயுதப் படையில் பணிபுரியும் 3 போலீஸாா், துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இவா்கள் பாதுகாப்புப் பணிக்காக ஏ.கே.47 ரக துப்பாக்கி பயன்படுத்தி வந்தனா். இதில், காவலா் பாலகுமாா் (30) என்பவா் அந்த துப்பாக்கியில் 10 குண்டுகளை லோடு செய்துவிட்டு, முறையாக சேஃப்டிலாக் செய்யாமல் வைத்திருந்ததாக தெரிகிறது.
அப்போது, எதிா்பாராதவிதமாக டிரிகரில் அவரது கை விரல் பட்டு துப்பாக்கி வெடித்தது. மேல் நோக்கி துப்பாக்கியை அவா் வைத்திருந்ததால், நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து காவலா் பாலகுமாரிடம், மாநகர காவல் ஆணையா் ஆா்.ராஜேந்திரன் நேரடியாக விசாரணை நடத்தினாா். அப்போது, துப்பாக்கி வெடித்ததற்கான காரணங்களை அவா் கூறியுள்ளாா்.
அதைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மற்ற 2 காவலா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு, காவலா் பாலகுமாா் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.