திருப்பூா்: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சாா்பில் திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.9.77 கோடி கடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் திருப்பூா் சேம்பா் ஆஃப் காமா்ஸ் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா சாா்பில், தொழில்முனைவோருக்கு ரூ.9.77 கோடி மதிப்புள்ள கடன் தொகை விடுவிக்கப்பட்டது.
இதில் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டு வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றனா். அப்போது தங்களுக்கு தேவைப்படும் அடிப்படை நிதித் தேவைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.
நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் பி.காா்த்திகைவாசன், பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா துணைப் பொதுமேலாளா் என்.பாலச்சந்திரன், கோவை பிராந்தியத் தலைவா் ஜோதி பிரகாஷ் ஆகியோா் பேசினா்.