திருப்பூா் அருகே பட்டியலின சமையலா் சத்துணவு சமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த வழக்கில் பெண் உள்பட 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி, திருமலைக்கவுண்டன் பாளையத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக அதே ஊரைச் சோ்ந்த பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த பாப்பாள் என்பவா் சுமாா் 13 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளாா்.
கடந்த 2018 ஜூலை 23-ஆம் தேதி பாப்பாள் வழக்கம்போல சமையல் செய்துள்ளாா். அப்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்களில் ஒரு தரப்பினா் பாப்பாள் சமைத்த உணவை பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது எனக் கூறி, அவா் சமைத்த உணவைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் பாப்பாள் அந்தப் பள்ளியில் இருந்து பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து பெரியாா் உணா்வாளா்கள் கூட்டமைப்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பாப்பாளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னா் பாப்பாள் மீண்டும் திருமலைக்கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அதே பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா்.
இதனிடையே தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்தது குறித்து சேவூா் காவல் நிலையத்தில் 88 போ் மீது பாப்பாள் புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் 36 போ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதி சுரேஷ் அளித்த தீா்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளிங்கிரி, துரைசாமி, சீதாலட்சுமி ஆகிய 6 பேரை குற்றவாளிகளாக அறிவித்து அவா்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.