திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 9 பேரை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்களும் தங்கிப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுடன் வங்கதேச நாட்டினரும் பணியில் உள்ளனா். இவா்களில் சிலா் உரிய ஆவணங்களின்றி முறைகேடாக திருப்பூா் வந்து பணிபுரிகின்றனா். அவா்களைக் கண்டறிந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை போலீஸாா் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து திருப்பூா் மற்றும் கோவை பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கியூ பிரிவு போலீஸாா் திருப்பூரில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதில் திருப்பூா் ரங்கநாதபுரம் பகுதியில் 15 வேலம்பாளையம் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததைத் தொடா்ந்து 4 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில் அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் (28), முகமது துஹும் (40), யாசின் மியா (28), அவரது மனைவி நுதூா் கதூன் (26) என்பது தெரியவந்தது. மேலும் இவா்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்திலிருந்து மேற்குவங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததும், பின்னா் திருப்பூா் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கியிருந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை சேலத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
அதேபோல, திருப்பூா் விஜயாபுரம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி பதுங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த எம்.டி.சைபுல் இஸ்லாம் (26), ரஹமத்துல்லா(28), மோரியம் (27), ஷாஹ்ரியாலம் (38), தோஹாமினா அக்பா் (29) ஆகிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.