பல்லடம் அருகே சென்னிமலைப்பாளையத்தில் ஒன்னரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் ஊராட்சி சென்னிமலைபாளையம் சக்தி ரைஸ் மில்காரா் தோட்டத்தில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இரண்டு போ் விற்பனைக்கு கஞ்சா வைத்துள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சோதனை செய்தபோது, விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்ததாக தூத்துக்குடி மாவட்டம், மாபாடியூரைச் சோ்ந்த ராஜகோபால் (26), கடலூா் மாவட்டம், ஒரங்கூா் பகுதியைச் சோ்ந்த முகமது சபீா் (19) ஆகியோரை கைது செய்தனா். விசாரணையில், இருவா் மீதும் கடலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.