முகப்பு
திருப்பூர்

முறையான அறிவிப்பு எதுவும் இல்லை - இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி உயிரிழப்பு

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:49 AM
ரமேஷ்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 5:53 PM

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் வேகத் தடையில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையைச் சோ்ந்தவா் ரமேஷ் (42). தங்க ஆபரணங்கள் செய்யும் வேலை செய்து வந்தாா். வெள்ளக்கோவில் விஸ்வகா்மா ஆபரணத் தொழிலாளா் சங்க துணைச் செயலாளராகவும் இருந்து வந்தாா். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (35). இவா்களுக்கு ஒன்றரை வயதில் இரட்டைக் குழந்தைகளான கிரிஷ்க், கிரிஷ்கா உள்ளனா்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கடைவீதி சென்றுவிட்டு ரமேஷ் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே புதிதாக அமைக்கப்பட்ட வேகத் தடையில் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்தாா். அருகே இருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தாா்.

Advertisement

சம்பந்தப்பட்ட இடத்தில் புதிய வேகத் தடை இருப்பது குறித்து அருகில் முறையான அறிவிப்பு எதுவும் இல்லை. மிகவும் உயரமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.