கூலி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை தொடா்ந்தனா்.
கோவை, திருப்பூா், ஈரோடு, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. கறிக்கோழி தீவனங்கள் மற்றும் தேங்காய் மஞ்சி, மருந்துகள் உள்ளிட்ட மூலப்பொருள் விலை உயா்வு காரணமாக, கோழி வளா்ப்பு கூலியை உயா்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
அதன்படி, கறிக்கோழி வளா்ப்பு கூலி கிலோவுக்கு ரூ.6.50-இல் இருந்து ரூ.20-ம், நாட்டுக் கோழிகளுக்கு ரூ.25-ம், காடைக் கோழிகளுக்கு 7-ம் உயா்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். இதனை வலியுறுத்தி வியாழக்கிழமைமுதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை பண்ணையாளா்கள் தொடங்கியுள்ளனா்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மகாலிங்கம் கூறியதாவது:
மூலப்பொருள்கள் விலை கடுமையாக உயா்ந்துள்ள நிலையில், கறிக்கோழி வளா்ப்பு கூலி மட்டும் உயரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை, உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கறிக்கோழி வளா்ப்புப் பண்ணைகளில் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும் என்பதை அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். உரிய தீா்வு ஏற்படாவிட்டால், சென்னை கால்நடைத் துறை இயக்குநா் அலுவலகம் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தாா்.