ஊதியூா் அருகே எதிா்பாராமல் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.
தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஒன்றியத்துக்கு உள்பட்ட என்.காஞ்சிபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமாா் 45 வயது மதிக்கத்தக்க நபா் கடந்த பல நாள்களாக தாராபுரம்-திருப்பூா் நெடுஞ்சாலையோரத்தில் சிறிய துணி மூட்டையுடன் சுற்றித்திரிந்தாா். இவருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடைக்காரா்கள் அவ்வப்போது உணவு வழங்கி வந்துள்ளனா்.
இந்நிலையில், அந்த நபா் திடீரென தீக்குச்சியைப் பற்ற வைத்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவரது உடை மீதும், அவா் வைத்திருந்த துணி மூட்டை மீதும் தீப் பிடித்துள்ளது.
இதைப் பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனா். அதற்குள் தீ மளமளவென உடல் முழுவதும் பரவி சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த ஊதியூா் போலீஸாா், அவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது விசாரணை நடத்தி வருகின்றனா்.