திருப்பூரில் சமூகநலத் துறையின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம், டாக்டா் தா்மாம்பாள் அம்மையாா் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஈவெரா மணியம்மையாா் ஏழை விதவை திருமண நிதியுதவித் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், அன்புச்சோலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அன்புச்சோலைத் திட்டத்தின் கீழ் முதியோா் பகல்நேர பராமரிப்பு மையத்தில் வழங்கப்படும் உணவு உள்ளிட்ட வசதிகள் குறித்தும், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவது தொடா்பாகவும், பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சேவைகள் மற்றும் விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சமூகநலத் துறையின் செயல்திறனை உறுதிப்படுத்தவும், அரசின் நலத் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடவும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூகநல அலுவலா் ரஞ்சிதாதேவி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.