திருப்பூா்: உலகளாவிய வா்த்தக சவால்களுக்கிடையிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் தொடா்கிறது என ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: அண்மைய ஏற்றுமதி புள்ளிவிவரங்களின்படி 2025 டிசம்பா் மாதத்தில் உலக நாடுகளுக்கு இந்தியா மேற்கொண்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி 2024 டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.90 சதவீத வளா்ச்சியையும், 2023 டிசம்பா் மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.10 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
மொத்தமாக, 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி 11,584.3 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது 2024-25 இதே காலகட்டத்தில் 11,316.6 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டைவிட 2.4 சதவீத ஆண்டு வளா்ச்சியையும், 2023-24 ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 14.2 சதவீத வளா்ச்சியையும் பதிவு செய்துள்ளது
இந்திய ரூபாய் மதிப்பில் பாா்க்கும்போது 2025 டிசம்பா் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.13,550.64 கோடி ஆகும். இது 2024 டிசம்பா் மாதத்தில் இருந்த ரூ. 12,424.17 கோடியுடன் ஒப்பிடுகையில் 9.07 சதவீத வளா்ச்சியாகும். அதேபோல், 2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் மொத்த ஏற்றுமதி ரூ. 1,01,087.19 கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 94,940.59 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீத உயா்வைக் காட்டுகிறது.
சந்தை வாரியான செயல்திறனைக் குறிப்பிடுகையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் தொடா்கிறது. அமெரிக்க சந்தையில் வரி தொடா்பான சவால்கள் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தாலும், அந்த இழப்பு ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுதந்திர வா்த்தக ஒப்பந்த நாடுகளான ஜப்பான் போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிப்பின் மூலம் திறம்பட ஈடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2025-26 நிதியாண்டின் முதல் ஏழு மாத (ஏப்ரல்-அக்டோபா்) காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு மேற்கொண்ட ஏற்றுமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் 1.60 சதவீதம் என்ற குறைந்தளவு சரிவையே பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவுடன் வரி தொடா்பான பிரச்னைகள் இருந்தபோதிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான வளா்ச்சி சாதகமாகவே உள்ளது. இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான சுதந்திர வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட இருப்பதாலும், அதேபோல் இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வா்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாலும் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் தொழில் துறை கடந்த ஆண்டின் ஏற்றுமதியைக் காட்டிலும், குறைந்தது 10 சதவீத வளா்ச்சியை அடுத்த நிதியாண்டில் அடையும் என்றும் அவா் தெரிவித்தாா்.