காங்கயம்: காங்கயம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் காரில் பயணித்த இருவா் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்தவா் கவின் (32). இவா் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தாா். இவருடைய உறவினா் சென்னிமலை பகுதியைச் சோ்ந்த மெரூன் (23). இவா் சென்னையில் பணி புரிந்து வந்தாா்.
இவா்கள் இருவரும் காரில் பழனி முருகன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, காங்கயம் வழியாக ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். காங்கயம்-ஈரோடு சாலையில் நாட்டாா்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை காலை 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது ஈரோட்டில் இருந்து பழனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், இவா்கள் சென்ற காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள், கவின் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தொடா்ந்து மெரூன், ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு அதிா்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.