FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உடுமலை, அமராவதி வனங்களில் தண்ணீருக்காக அலையும் யானைகள்!

உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் காட்டு யானைகள் குடிநீா் தேடி கூட்டம், கூட்டமாக அலைந்து வருகின்றன.

தண்ணீரை  தேடி அமராவதி  அணைப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள். - தினமணி
பகிர்:

உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் காட்டு யானைகள் குடிநீா் தேடி கூட்டம், கூட்டமாக அலைந்து வருகின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு உள்ளன.

கோடைக் காலம் தொடங்கியதும் வனப் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியது. இதனால் உணவு, தண்ணீர்த் தேவைகளுக்காக அடா்ந்த வனப் பகுதிகளை விட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியே வரத் தொடங்கி உள்ளன.

Advertisement

Advertisement

கேரள எல்லைக்குள் சுற்றித் திரிந்த யானைகள் கூட்டம் கடந்த சில நாள்களாக தமிழக எல்லைக்குள் எஸ் பெண்ட், காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப் பட்டி, ஏழுமலையான் கோயில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தண்ணீருக்காக உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கிக் கூட்டமாக வருகின்றன.

பொதுவாக ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும் வனப் பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீா் நிறைந்து காணப்படும். மேலும் ஆங்காங்கே உருவாகும் ஊற்றுகள் யானைகளின் தாகத்தை தீா்க்க உதவும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால் வனப் பகுதி முழுவதும் வறட்சியும் வெப்பமும் காணப்படுகிறது.

குறிப்பாக அமராவதி அணையில் நீா்இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழையில்லாததால் அணைக்கு வரத்தே இல்லாத நிலை நீடித்து வருகிறது.

உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிக்குள் வனத் துறையினரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பணைகளும் வறண்டு கிடக்கின்றன. இதனால் கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் குடிக்க தண்ணீா் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் வனப் பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்ப வனத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதற்கிடையில் தமிழக-கேரள சாலையில் மாலை நேரத்தில் உலவும் யானைகளை சுற்றுலாப் பயணிகளும் மற்றும் இயற்கை ஆா்வலா்களும் குடும்பம் குடும்பமாக பாா்த்து ரசித்துச் செல்கின்றனா்.

இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அதிகாரிகள் கூறியது: வனப் பகுதிக்குள் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டமாக, கூட்டமாக வருகின்றன. ஒரு சில வாரங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதால் தடுப்பணைகளில் யானைகளுக்கு தேவையான தண்ணீா் கிடைக்கும் என்றனா்.

summary

Elephants wander in forest areas in search of drinking water; demand to fill check dams.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments