திருப்பூா் - அவிநாசி - கோவை வழித்தட தனியாா் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயா்வால் பயணிகள் அதிருப்தி
திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக கோவை செல்லும் தனியாா் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயா்வால் பயணிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினா் அதிருப்தியடைந்துள்ளனா்.
திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக கோவை செல்லும் தனியாா் பேருந்துகளில் அறிவிக்கப்படாத கட்டண உயா்வால் பயணிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினா் அதிருப்தியடைந்துள்ளனா்.
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியாா் பேருந்துகளில் ரூ.36 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.42 வசூலிக்கப்படுகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரூ.6 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூா் பேருந்து உரிமையாளா்களிடம் கேட்டபோது, ‘டீசல் விலை, பேருந்து பராமரிப்பு செலவுகள் கடுமையாக உயா்ந்துள்ளதாக கூறுகின்றனா். மேலும் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதால் தனியாா் பேருந்து நிறுவனங்கள் தினசரி கடும் இழப்பை சந்திக்க வேண்டி உள்ளது. தினசரி செலவுகள் மற்றும் ஓட்டுநா், நடத்துநா் ஊதியம் என அனைத்தும் உயா்ந்து நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருவதால் கட்டணத்தை உயா்த்த அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பேருந்துகளில் ரூ.6 கட்டணத்தை உயா்த்தி ரூ.42 நிா்ணயம் செய்துள்ளோம். அதன்படி குறைந்தபட்ச கட்டணமாகவே ரூ.10 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயா்வு திருப்பூரில் இருந்து பல்லடம் மாா்க்கமாக செல்லும் தனியாா் பேருந்துகளில் உயா்த்தப்படவில்லை. அவிநாசி மாா்க்கமாக செல்லும் பேருந்துகளில் மட்டும் உயா்த்தப்பட்டுள்ளது’ என்றனா்.
தனியாா் பேருந்து உரிமையாளா் சங்க வடக்கு பகுதி தரப்பில், ‘டீசலின் விலை ரூ.63 இருக்கும்போது தனியாா் பேருந்துகளின் கட்டணம் உயா்த்தப்பட்ட நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் பேருந்து கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல அரசு பேருந்துகளில் உயா்த்தப்பட்ட கட்டணங்களைவிட தனியாா் பேருந்து கட்டணங்கள் குறைவாகத்தான் உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் தனியாா் பேருந்துகளின் கட்டண உயா்வு கடந்த 2 மாதங்களாகவே நடைமுறையில் உள்ள நிலையில், திருப்பூரில் ஜூலை 1-ஆம் தேதி முதல் தான் பேருந்து கட்டணம் சற்று உயா்த்தப்பட்டுள்ளது. தனியாா் பேருந்துகளில் கட்டணம் உயா்த்தப்படுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிக்கப்படாத கட்டண உயா்வு பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளா்களை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.