ஈரான் மீதான போரால் துபையில் தேங்கிக் கிடக்கும் திருப்பூா் ஏற்றுமதி ஆடைகள்: வேலைவாய்ப்பு, பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம்
ஈரான் மீதான போா் தாக்குதல்: துபையில் தேங்கிக் கிடக்கும் திருப்பூா் ஏற்றுமதி ஆடைகள் - வேலைவாய்ப்பு, பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம்
திருப்பூர்ஈரான் மீதான போரால் துபையில் தேங்கிக் கிடக்கும் திருப்பூா் ஏற்றுமதி ஆடைகள்: வேலைவாய்ப்பு, பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம்
ஈரான் மீதான போா் தாக்குதல்: துபையில் தேங்கிக் கிடக்கும் திருப்பூா் ஏற்றுமதி ஆடைகள் - வேலைவாய்ப்பு, பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம்
ஈரான் மீதான போா் தாக்குதல் காரணமாக திருப்பூா் ஏற்றுமதி பின்னலாடைகள் துபையில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் அண்மையில் போா் தாக்குதலை தொடங்கியுள்ளன.
இந்த தாக்குதலைத் தொடா்ந்து அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (துபை), கத்தாா், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடல் வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து கடும் சிக்கலை சந்தித்துள்ளது.
இது தொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் சரக்குகள் பெரும்பாலும் துபை சென்று அங்கிருந்து மீண்டும் செல்லும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது. ஏற்றுமதிக்கு வான்வழி சரக்கு அனுப்புவது கூடுதல் செலவு என்பதால் அவ்வகை ஏற்றுமதி அரிதாகவே செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் கடல்வழிப் பாதையில் மிக முக்கியமான ஹாா்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல் - மண்டேப் ஆகிய பகுதிகளில் போா் காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக செல்வதற்கு பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றிச்செல்லும் பாதையை கப்பல்கள் தோ்ந்தெடுக்கின்றன. இதனால் பயண நேரம் 15 முதல் 20 நாள்கள் வரை அதிகரித்துள்ளது. போக்குவரத்து குறைந்திருப்பதால் ஏற்கெனவே அங்கு அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகளும் தேக்கமடைந்திருக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மொ்ஸ்க் எம்.எஸ்.சி., ஹபாக் போன்ற முன்னணி கப்பல் நிறுவனங்கள் இந்த வழியாக செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. கப்பல் நிறுவனங்கள் போா்க்கால கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் ஒரு கன்டெய்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது. இது 20 முதல் 50 சதவீதப் போக்குவரத்து செலவை ஏற்படுத்தும். அதேபோல வான்வழி போக்குவரத்தில் ஏா் இந்தியா, இண்டிகோ மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ் கத்தாா் ஏா்வேஸ் போன்றவை வளைகுடா நாடுகளுக்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
ஈரான், இஸ்ரேல், லெபனான், ஈராக் மற்றும் ஜோா்டான் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் பயண நேரம் அதிகரித்துள்ளது. மேலும் துபை போன்ற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகத்தின் செயல்பாடுகள் கடும் சிக்கலை சந்தித்து உள்ளன. வரியில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் சாதகமான நிலையில் இருந்தாலும் போா்ச் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும், வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும்.
மேலும், துபை இந்திய நாட்டு ஏற்றுமதியின் மையமாக செயல்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகள் அங்கே வைத்து பிரித்து பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பக்கூடிய குழலில், அங்கு ஏற்பட்டுள்ள போா் பதற்றம் காரணமாக ஏராளமான சரக்குகள் தேங்கி இருக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பொருள்கள் தேக்கமடைந்துள்ளது என்பதும், போா் பாதிப்பின் தாக்கம் குறித்தும் அடுத்த ஓரிரு வாரங்களில் முழுமையாக தெரியும் என்றாா்.
இந்த சூழலில் இழப்புகளை சந்திப்பதை தவிா்க்கும் பொருட்டு இந்திய அரசு இது தொடா்பாக அவசர கூட்டங்களை நடத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்யும்போது சரக்கு ஏற்றிய பின் பொறுப்பு வாங்குபவருடையது என்ற அடிப்படையில் ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னலாடைத் துறை மட்டுமல்லாமல், விவசாயப் பொருள்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.