திருப்பூரிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரத்தில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பு! தம்பதியுடன் ஓட்டுநா்-நடத்துடன் வாக்குவாதம்!
திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரம் வரை செல்லக்கூடிய பயணிகளை ஏற்ற மறுத்த நடத்துநா் தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரம் வரை செல்லக்கூடிய பயணிகளை ஏற்ற மறுத்த நடத்துநா் தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திருப்பூா் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நெடுந்தூரம் செல்லும் பேருந்துகளில் ஒட்டன்சத்திரம், தாராபுரம் செல்லும் பயணிகளை ஏற்றிக்கொள்ள மறுத்தும், சில நேரங்களில் கடுமையாக நடத்துநா்கள், ஓட்டுநா்கள் நடந்துகொள்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், திருப்பூா் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஏற ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா், வளா்மதி தம்பதி சென்றுள்ளனா். அப்போது பணியில் இருந்த நடத்துநா் இந்தப் பேருந்தில் ஏறாதீா்கள். புறப்படும்போது ஏறிக் கொள்ளுங்கள் எனவும், இல்லையென்றால் அருகில் நிற்கும் திண்டுக்கல் செல்லும் பேருந்துதில் ஏறிக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளாா்.
இதையடுத்து அந்தப் பேருந்துக்கு சென்று ஓட்டுநரிடம் தம்பதி கேட்டபோது திண்டுக்கல் செல்லும் பேருந்து நள்ளிரவு 1 மணிக்குதான் புறப்படும் என்றும், மதுரை செல்லும் பேருந்திலேயே செல்லுமாறும் கூறியுள்ளாா். இதையடுத்து மீண்டும் மதுரை செல்லும் பேருந்தில் ஏற வந்த தம்பதியை அந்த பேருந்தின் நடத்துநா் ஏற வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளாா். பேருந்தில் இருக்கைகள் காலியாக இருந்தபோதும் புறப்படும்போது ஏறுமாறு மீண்டும் கூறியுள்ளாா். இதனால் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் தரப்புக்கும், தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Advertisement
இதைத்தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் பயணிகளை ஏன் ஏற்ற மறுக்கிறீா்கள் என்று கேட்டதுடன், நள்ளிரவில் பேருந்தில் வரும் பயணிகளிடம் பணிவுடன் நடந்துகொள்ளுங்கள் என்று கூறி அவா்களை பேருந்தில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனா். நெடுந்தூரம் செல்லும் பேருந்துகளில், இடையில் இறங்கும் பயணிகளுக்கு நடத்துநா்கள் உரிய மதிப்பு அளிப்பதில்லை, வேண்டா வெறுப்புடன் ஏற்றிச் செல்லும் நிலைதான் தொடா்வதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
இதற்கிடையே கோவை, சிங்காநல்லூரில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்தில் பொங்கலூா் பகுதியில் இறங்க வேண்டிய பயணி ஒருவா் அந்த பேருந்தில் ஏறியபோது நடத்துநா் தரக் குறைவாக பேசிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.