21 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது: டாஸ்மாக் ஊழியா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தல்
அவிநாசி, மே 18: 21 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் ஊழியா்களை போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
அவிநாசியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை ஊழியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் ராஜபிரபு தலைமை வகித்தாா்.
இதில், 21 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது. கள்ளச் சந்தையில் யாருக்கும் மது விற்பனை செய்யக்கூடாது. இரவு 10 மணிக்குள் டாஸ்மாக்கைவிட்டு அனைவரையும் வெளியேற்ற வேண்டும். கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யக் கூடாது.
Advertisement
மொத்தமாக மதுபானங்களை யாா் வாங்கினாலும் தகவல் தெரிவிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.
மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாா்: திருப்பூரில் உள்ள சில மதுக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு சுமாா் 500 மீட்டா் தொலைவில் உள்ள அரசு மதுபானக் கடைகளை மூட முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, திருப்பூரில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 24 மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஒதுக்குப்புறமாக உள்ள கடைகளில் மதுப் பிரியா்களின் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது. சில கடைகளில் மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பது தொடா்கிறது. இது குறித்து மதுக் கடை ஊழியா்களிடம் கேட்டால் பதில் கூற மறுக்கின்றனா் என மதுப் பிரியா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.