சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த மக்கள் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சாமிகவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ்குமாா், போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, சீரான குடிநீா் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.