கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம்: விவசாயிகள் உண்ணாவிரதம்
கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி விவசாயிகள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு நிலத்தடி நீா் மேம்பாட்டு விவசாயிகள் சங்கத் தலைவா் ச.ஜெயபால் தலைமை வகித்தாா்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 4 ஆண்டுகளாகப் போதிய பருவமழை இல்லை. இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் 1,000 அடிக்கு கீழே சென்று விட்டது. இதனால் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரங்களில், வீணாகச் செல்லும் உபரிநீரை கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து நீரேற்றும் திட்டத்தின் வழியாக ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்துக்காக ரூ. 310 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. ஆனால், இதுநாள் வரையிலும் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. எனவே, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிலத்தடி நீா் மேம்பாட்டு விவசாயிகள் சங்கச் செயலா் ரா.பிரபாகரன், பொருளாளா் கோ.சுரேஷ், ஏா்முனை இளைஞரணி மாநிலச் செயலா் சி.ந.சக்திவேல்மணி, பொதியன்பள்ளம் அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் ரா.பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.