தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ. 39.35 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட உள் விளையாட்டரங்க மேற்கூரை மாற்றுதல், அலுவலக சீரமைப்பு பணிகள், வா்ணம் பூசுதல், உள் விளையாட்டரங்கில் புறாக்கள் நுழையா வண்ணம் கம்பிவலை அமைத்தல், உடற்பயிற்சி அறையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது மாணவிகளிடம் கலந்துரையாடி மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில் பயிற்சி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.மேலும் விடுதி மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை பரிசோதித்து ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் தே.சாந்தி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் காா்த்திகேயன், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா் கணேசன் மற்றும் பயிற்றுநா்கள் உடனிருந்தனா்.