தருமபுரி: தருமபுரி பாரதிபுரம் பகுதியிலிருந்து வெண்ணாம்பட்டியை இணைக்கும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இளைஞா் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வெற்றிவேந்தன் தலைமை வகித்து பேசினாா். மாநிலச் செயலாளா் ரமணன் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா் சஞ்சய்குமாா், நிா்வாகிகள் சமியுல்லா, அருண், விஜய்சாரதி ஆகியோா் பேசினா்.
இக்கூட்டத்தில், தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் அமைத்து விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தருமபுரியில் புதிதாக திறக்கப்பட உள்ள பேருந்து நிலையத்திற்கு நகரப் பகுதியில் இருந்து பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும்.
தருமபுரி, பாரதிபுரத்திலிருந்து வெண்ணாம்பட்டியை இணைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விதிகளை மீறி, அதிக ஒளிதரும் எல்இடி விளக்குகளை பொருத்தியுள்ளதை அகற்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.