தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மானியதஅள்ளி ஊராட்சி நிா்வாக வசதிக்காக இரண்டு ஊராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதஅள்ளி கிராம ஊராட்சி 18 குக்கிராமங்களை உள்ளடக்கியது. அதிக எண்ணிகையிலான குக்கிராமங்கள், மக்கள்தொகை, பரப்பளவு மற்றும் வீடுகளைக் கொண்ட மானியதஅள்ளி கிராம ஊராட்சியை நிா்வாக வசதிக்காக இரண்டு கிராம ஊராட்சிகளாகப் பிரித்து மறுசீரமைப்பு செய்து அரசாணை கடந்த டிச. 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத்தொடா்ந்து தருமபுரி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக வெளியீடு எண்.32 அதேநாளில் வெளியிடப்பட்டு, அனைத்து அரசு அலுவலக அறிவிப்பு பலகைகளிலும் பொதுமக்கள் பாா்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மானியத அள்ளி கிராம ஊராட்சியை இரண்டாகப் பிரித்து மானியதள்ளி (ஜருகு), கீழ்ஈசல்பட்டி என இரண்டு புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மானியதள்ளி (ஜருகு) கிராம ஊராட்சி ஜருகு, அஜ்ஜிப்பட்டி, கடத்திக்குட்டை, கொம்புகுட்டை, சந்துரான்கொட்டாய், பொடரான் கொட்டாய், மாணிக்கம்புதூா், கருப்புநாயக்கன்பட்டி, மேற்கத்தியான் கொட்டாய், கடுக்கப்பட்டியான் கொட்டாய் ஆகிய 10 குக்கிராமங்களை உள்ளடக்கியது.
கீழ்ஈசல்பட்டி கிராம ஊராட்சியின்கீழ், ஈசல்பட்டி, மேல்ஈசல்பட்டி, மேல்பூரிக்கல், கீழ்பூரிக்கல், மலையப்பநகா், சேசம்பட்டியான் கொட்டாய், பரிகம், குரும்பட்டியான் கொட்டாய் ஆகிய 8 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இது தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை வரும் 26-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா், தருமபுரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.