பேருந்து நிலைய கடை ஒப்பந்த உரிமத்தை முறைகேடாக நீட்டிக்கும் பாா்பாரப்பட்டி பேரூராட்சி தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து தா்னாவில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாா்டு உறுப்பினா் கைது செய்யப்பட்டாா்.
பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுமாா் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காலி இடத்தில் ஆவின் பாலகம் நடத்துவதற்காக, அதன் நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு ஓராண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. அதன் பிறகு அந்த ஒப்பந்தம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை ரூ. 8,000 முதல் ரூ. 12,000 -வரை ஏலம் விடப்பட்டுள்ளது. ஆனால், பிரதான சாலை பகுதியின் முகப்பில் உள்ள காலி இடத்தை ரூ. 3,000 வாடகைக்கு விடுவதற்கு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துடன் ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ளது. பேரூராட்சி விதிகளின்படி காலி இடத்திற்கு வழிகாட்டு மதிப்பில் மூன்று சதவீதம் குறையாமல் வாடகை வசூலிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மாத வாடகையாக ரூ. 18,000 நிா்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்த உரிமம் முடிவுற்ற நிலையில், அதை நீட்டிப்பு செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து, பொது ஏலம் மூலம் ஒப்பந்த உரிமத்தை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பொது ஏலம் நடத்தாமல், ஒப்பந்தத்தைத் தொடா்ந்து நீட்டித்துவரும் நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரூராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் கால நீட்டிப்பு குறித்த தீா்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஒப்பந்த ஏலமுறை கால நீட்டிப்பு தீா்மானத்தை கைவிடக் கோரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 8 ஆவது வாா்டு உறுப்பினா் விஸ்வநாதன் வெளிநடப்பு செய்து, அலுவலக நுழைவுவாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து அனுமதியின்றி தா்னாவில் ஈடுபட்ட வாா்டு உறுப்பினா்
வே.விஸ்வநாதனை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.