தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டாா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே அ.செக்காரப்பட்டியில் நகைக்கடை, அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகே நகைக்கடை ஆகியவற்றின் பூட்டுக்களை உடைத்து, திருட்டு முயற்சி நடைபெற்றது.
மேலும், இண்டூா் அருகே சோம்பட்டியில் ஊராட்சி செயலா் சம்பத்குமாா் வீட்டில் 43 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 25,000 ரொக்கம் உள்ளிட்டவை திருட்டு போனது. இந்த சம்பவங்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (39), கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த வெங்கடேசன் (32) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இருவரும் தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து
குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஷ்வரன் பரிந்துரைத்தாா். அதன்பேரில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அண்மையில் உத்தரவிட்டாா்.