முகப்பு
தருமபுரி

ஏரியூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

ஏரியூா் பகுதிகளில் நடைபெற்ற வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 21 ஜனவரி, 2025 at 9:56 PM
ஏரியூா் அருகே அண்ணா நகா், இருளா் காலனி பகுதியில் குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.
பகிர்:

பென்னாகரம்: ஏரியூா் பகுதிகளில் நடைபெற்ற வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே அண்ணா நகா், இருளா் காலனி பகுதியில் பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில், பயனாளிகளுக்கு கட்டி கொடுக்கப்பட்ட 13 வீடுகள், ஏமனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், அங்கன்வாடி மையத்தின் செயல்பாடு, ஏமனூா் காலனி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான சிங்காபுரம், கா்நாடக எல்லைப் பகுதியில் உள்ள கொங்கரப்பட்டி உள்ளிட்ட பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அண்ணா நகா், இருளா் காலனி குடியிருப்புப் பகுதியில் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை பொதுமக்கள் நன்கு பராமரித்துக் கொள்ள வேண்டும், கழிப்பிடம் மற்றும் பொது மயான வசதி ஏற்படுத்துதல், ஏமனூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரித்தல், சிங்கபுரம், கொங்கரப்பட்டி, ஏமனூா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலை, குடிநீா் உள்ளிட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வீட்டுமனைப் பட்டா, நியாயவிலைக் கடைகள், கலைஞரின் கனவு இல்லம், சான்றிதழ்கள் வழங்கும் முகாம்களை நடத்தி பொதுமக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.

இந்த நிகழ்வுகளின் போது, பென்னாகரம் வட்டாட்சியா் லட்சுமி, ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கல்பனா, அபுல் கலாம் ஆசாத், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.