பாப்பாரப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாப்பாரப்பட்டி நகரப் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டடங்கள் ஆகியவற்றை அகற்றும் பணி
பென்னாகரம்: பாப்பாரப்பட்டி நகரப் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டடங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி நகரப் பகுதியில் இருந்து பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், பழைய பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து நகரப் பகுதி, மூன்று சாலை சந்திப்பு, மின்வாரிய அலுவலகம் வரையில் என சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள், சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் மங்கையா்க்கரசி, உதவி பொறியாளா் ரஞ்சித்குமாா் ஆகியோா் தலைமையில் சாலை ஆய்வாளா்கள் அந்தோணி, ஆதிமூலம் மற்றும் சாலைப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெறும் எனவும், விதியை மீறி ஆக்கிரமிப்பு செய்யும் வணிக நிறுவனங்கள், கட்டுமானப் பணிகள் மேற்கொள்வோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.