முகப்பு
தருமபுரி

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:31 PM
கோப்புப் படம்
பகிர்:

-டி.காளியப்பன்

தருமபுரி மாவட்டம். அரூர் அருகேயுள்ள சிட்லிங் பகுதி மலைவாழ் மக்கள், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி தரும் வேட்பாளர்களுக்காகக் காத்திருக்கின்றனர்.

அரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது சிட்லிங் ஊராட்சி இந்த ஊராட்சி யில் வேலனூர், சிட்லிங் எஸ். தாதம்பட்டி, ஏ.கே. தண்டா, மேல்தண்டா, கீழ்தண்டா ஆகிய மலை கிராமங்களில் மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் கோட்டப்பட்டி- சிட்லிங் தார்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சுமார் 12 கி.மீ. தொலைவு கொண்டுள்ளது.

Advertisement

சிட்லிங் பகுதியில் உள்ள மலைகள் மற்றும் தரைக்காடுகளில் ஏராளமான காட்டெருமைகள், மான்கள் உள்ளன. இதனால், இந்த சாலை வனத்துறை கட்டுப்பாட் டில் உள்ளது. சிட்லிங் வழியாக சேலம், வாழப்பாடி, பேளூர், நரிப்பள்ளி, அரூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வனத் துறைக்கு சொந்தமான சாலை என்பதால், கோட்டப்பட்டி சிட்லிங் தார்சாலை மிகவும் குறுகலான ஒருவழிப்பாதையாக உள்ளது. தார்சாலையில் பேருந்து, லாரிகள் செல்லும்போது எதிரே இருசக்கர வாகனம் வந்தால்கூட ஒதுங்கி நிற்க இடமில்லை. தார்சாலையோரம் ஒரு மீட்டர் அளவுகூட சாலையை அகலப்படுத்த முடியாத சூழல் உள்ளது.

ஓய்ந்துபோன மக்கள்

சிட்லிங் தார்சாலை குண்டும்குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் அவசர சிகிச்சை ஊர்தி, இருசக்கர வாகனங்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி பேருந்துகள், வேளாண் பொருள்களை எடுத்துச் செல்லும் டிராக்டர்கள் செல்லமுடியாத நிலையுள்ளது.

தார்சாலை முற்றிலுமாக சேதமடைந்து, மண்சாலையாக மாறியுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள சாலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக சிட்லிங் மலைவாழ் மக்கள் போராடி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. அரசு தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை என்பதால். ஏமாற்றம் அடைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறு கின்றனர்.

அரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அ. சண்முகம், அதிமுக வேட்பாளராக வே சம்பத்குமார் எம்எல்ஏ ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிட்லிங்- கோட்டப்பட்டி சாலையை தார்சாலையாக மாற்றுவோம் என வாக்குறுதி அளிக்கும் வேட்பாளருக்கு தங்களின் வாக்குகளை செலுத்துவதாக மலைவாழ் பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.

வனத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று சுமார் 30 கிராமங்கள் பயன்பெறும் கோட்டப்பட்டி-சிட்லிங் தார்சாலையை சீரமைக்க வேண்டும். அதற்கு தற்போதுள்ள வாக்காளர்கள் உறுதியளிக்க வேண்டும் என்பதே பழங்குடியின மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments