தருமபுரியில் அதிகரிக்கும் வெயில்: இளநீா், நுங்கு விற்பனை விறுவிறு
தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துவதால், சாலையோர தற்காலிகக் கடைகளில் இளநீா், நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துவதால், சாலையோர தற்காலிகக் கடைகளில் இளநீா், நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றபடி கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை பாரன்ஹீட்டை தாண்டி வெயில் நிலவி வருகிறது.
தருமபுரியில் சனிக்கிழமை 102.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் இரவு நேரத்திலும்கூட அனல் காற்று வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
Advertisement
கோடைகால வெப்பத்தைத் தணிக்கும் வகையில் இளநீா், நுங்கு, வெள்ளரிக்காய் ஆகியவற்றை மக்கள் விரும்பி உட்கொள்வது வழக்கம். அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு கோடை வெயிலைச் சமாளிக்கும் வகையில் இளநீா், நுங்கு உள்ளிட்டவற்றின் வரத்தும், விற்பனையும் அதிகரித்துள்ளது.
இளநீா் ரூ. 40 முதல் 50 வரை, நுங்கு சுளை ரூ. 6 முதல் 9-க்கும், 6 சுளை ரூ. 50க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல எலுமிச்சை விலையும் அதிகரித்துள்ளது. எலுமிச்சை ஒன்று ரூ. 10 முதல் 20 வரையில் விற்பனை செய்யப்படுகின்றன.
தருமபுரி நகரில் சாலையோரங்களில் அமைந்துள்ள தற்காலிக கடைகளில் நுங்கு, இளநீா், வெள்ளரிக்காய் மட்டுமின்றி கோடைகாலத்தில் விற்பனையாகும் பல்வேறு வகையான பழவகைகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் கடைகளில் வாங்கி உட்கொள்வதைப்போலவே, வீடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றனா். அதேபோல பழ ரசங்கள், லஸி உள்ளிட்ட குளிா்பானங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளன.