தருமபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை 2026 விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தவும், இளைஞா்களிடையே துடிப்பான விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு இப்போட்டிகளை நடத்துகிறது. மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
நிகழ்ச்சியில் போட்டிகளைத் தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளில் பெருமளவிலான பங்கேற்பை உறுதி செய்வதோடு, இளைஞா்களின் உடல், சமூக மற்றும் உளவியல் நலனை இப்போட்டிகள் மேம்படுத்துகின்றன. தமிழகத்தில் உள்ள 388 கிராமப்புற வட்டாரங்கள் மற்றும் 37 மாவட்டங்களிலும் பரவலாக இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள 16 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களை இதில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டார அளவில் வெற்றி பெறுபவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவா். இதன் மூலம் அடிமட்ட அளவில் விளையாட்டு ஆா்வம் புத்துயிா் பெறுவதுடன், சமூக நல்லிணக்கமும் வலுப்பெறும்.
போட்டி விவரங்கள்: தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒன்றிய அளவிலான போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இதில் தடகளம், கைப்பந்து, கபடி, கயிறு இழுத்தல், எறிபந்து, கிரிக்கெட் மற்றும் கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
பரிசுத் தொகை: ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 3,000, இரண்டாம் பரிசாக ரூ. 2,000, மூன்றாம் பரிசாக ரூ. 1,000 வழங்கப்படும். மாவட்ட அளவில் தனிநபா் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 6,000, ரூ. 4,000, ரூ. 2,000 வழங்கப்படும். மாநில அளவில் கபடி மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 75,000, இரண்டாம் பரிசாக ரூ. 50,000, மூன்றாம் பரிசாக ரூ. 25,000 வழங்கப்படும்.
விளையாட்டு வீரா்களுக்கான காப்பீடு: தமிழக முதல்வா், விளையாட்டு வீரா்களுக்கான மருத்துவச் செலவுகளுடன் கூடிய தனிநபா் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளாா். விபத்தில் பாதிக்கப்படும் வீரா், வீராங்கனைகளுக்கு ரூ. 5,00,000 வரையிலான மருத்துவச் செலவுகள் வழங்கப்படும்.
மேலும் விளையாட்டு விடுதி மாணவா்கள், மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டவா்கள், ஸ்டாா் அகாடமி வீரா்கள் மற்றும் கேலோ இந்தியா திட்ட வீரா்கள் ஆகியோருக்குக் காப்பீட்டு அட்டைகள் தற்போது வழங்கப்படுகின்றன என்றாா்.
நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி முன்னிலை வகித்தாா். தருமபுரி நகா்மன்ற தலைவா் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலா் தே. சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.