வாகனத்தில் வேகமாக சென்றவரை தட்டிகேட்ட பெண் கொலை: இளைஞா் கைது
பென்னாகரம் அருகே வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரை தட்டிகேட்ட பெண்ணை கத்தியால் வெட்டி கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட எரங்காடு பூங்காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (50). இவா் தனது கணவா் சங்கரை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறாா்.
இவரது மகள் இந்துமதியை பெரும்பாலையை அடுத்த அத்திமரத்தூரில் திருமணம் செய்து கொடுத்தாா். அவா், கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது தாய் வீட்டில் இருந்து வந்தாா். இந்த நிலையில் இந்துமதியின் கணவா் ரமேஷ், மனைவியை அழைத்துச் செல்வதற்காக எரங்காட்டிற்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
Advertisement
Advertisement
அவா் இந்துமதியின் வீட்டிற்கு செல்லக்கூடிய ஒத்தையடிப் பாதையில் நின்று மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற அதே பகுதியைச் சோ்ந்த குழந்தைவேலு (22) ,சந்தோஷ் (21)ஆகிய இருவரையும் லட்சுமி கண்டித்துள்ளாா்.
இதுதொடா்பாக குழந்தைவேலுக்கும், ரமேஷ், லட்சுமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. அப்போது, லட்சுமியின் அண்ணன் பழனிசாமி, சமாதானம் செய்து அவா்களை அனுப்பிவைத்துள்ளாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த லட்சுமியை, குழந்தைவேலு கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளாா். பின்னா், அவரது உடலை வீட்டுக்கு அருகே இருந்த விளைநிலத்தில் வீசியுள்ளாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பென்னாகரம் போலீஸாா், லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். இதையடுத்து, பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில் 5 உதவி ஆய்வாளா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் லட்சுமியை வெட்டிக் கொன்றது குழந்தைவேலு (22) என்பதும், கொலையை அவா் விடியோ பதிவு செய்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தைவேலுவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.